11 Dec 2015

பெரியார் பல்கலை. சார்பில் 7 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்

பெரியார் பல்கலைக்கழகம் சார்பில், சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், 7 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட
செய்தி: பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி மற்றும் பணியமர்த்த மையம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்-பிபிஎஸ் நிறுவனமும் இணைந்து,வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளது. வரும் 18-ஆம் தேதி, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி, ஒசூர் எம்.ஜி.ஆர். கலை அறிவியல் கல்லூரி, ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி ஆகிய இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றன.

இதேபோன்று, 19-ஆம் தேதி ஆத்தூர் பாரதியார் மகளிர் கல்லூரி, தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி, சங்ககிரி விவேகானந்தா கல்லூரி, ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. 20-ஆம் தேதி ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

இம் முகாமில், வணிக நடவடிக்கைகள், தரவு உள்ளீடு, தரவு ஆராய்தல் ஆகிய திறன் அடிப்படையில் ஆயிரம் மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இளநிலை பட்டப்படிப்பில் பி.காம், பி.பி.ஏ, பி.பி.எம், பி.எம்.எஸ், பி.பார்ம், பி.ஏ (பொருளியல் தவிர மற்றவை), பி.எஸ்.சி (புள்ளியியல், கணினி அறிவியல், ஐ.டி., ஐ.எஸ்.எம். தவிர) இவைகளில் ஏதேனும் ஒன்றினைப் பாடமாக எடுத்திருக்க வேண்டும்.

2015-ஆம் ஆண்டில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் (3 மாதத்துக்கு கீழ் வேலை அனுபவம் உள்ளவர்கள்) மற்றும் 2016-ஆம் ஆண்டு தேர்ச்சி பெறுபவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். திறனறித் தேர்வு, குழு விவாதம், தொழில் நுட்பமறிதல், மேலாளர் நேர்காணல் போன்றவற்றின் அடிப்படையில்,தேர்வு நடைபெறும். ரூ.13 ஆயிரம் மாதச் சம்பளமாக வழங்கப்படும். தேர்வுக்கு வரும் மாணவ-மாணவியர் 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், தன்விவரப்பட்டியல், கல்லூரி அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் இல்லை,

கூடுதல் விவரங்களுக்கு, வாழ்வியப்பணி வழிகாட்டி மற்றும் பணியமர்த்த மைய இயக்குநர் ரா.வெங்கடாசலபதியை தொடர்பு கொள்ளலாம் என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.